சுற்றுலா செல்ல தமிழ்நாட்டின் சிறந்த 10 குளிர்ச்சியான இடங்கள்!!!

அனைவருக்கும் சுற்றுலா செல்லலாம் என்றாலே மிகவும் மகிழ்ச்சி. ஏனென்றால் நமது குடும்பத்தினருடன், நண்பர்களுடனும், உறவினர்களுடன் செல்லும் போது, அங்கு இருக்கும் அழகிய இடங்களை பார்க்கும் போது நமக்கு இருக்கும் கஷ்டங்களை மறந்து மிகவும் சந்தோஷமாக மாறுகிறோம்.

அனைவருக்குமே ஒரே இடத்திற்கு சுற்றுலா செல்ல பிடிப்பதில்லை. சிலருக்கு கோவிலுக்கு செல்ல பிடிக்கும், சிலருக்கு கட‌ற்கரை செல்ல பிடிக்கும், ஒரு சிலருக்கு நீர்வீழ்ச்சி செல்ல, மலைப்பகுதிக்கு செல்ல என்று பல விதமான ஆசைகள் இருக்கும்.

அடிக்கிற வெயிலுக்கு ஒரு குளிர்ச்சியான இடத்திற்கு சுற்றுலா செல்ல விரும்புவோம். ஆனால் மழைக்காலத்தில் சென்று மாட்டிக்கொள்வோம். நாம் சுற்றுலா செல்ல விரும்பினால் சிறந்த இடத்தை மட்டும் தேர்வு செய்யாமல், அந்த இடத்தை சுற்றிப்பார்க்க சிறந்த பருவ காலத்தையும் தேர்வு செய்தால் நமது சுற்றுலா மிகவும் சந்தோஷமாகவும், அங்கு இருக்கும் இடத்தை சுற்றிப்பார்க்க வசதியாகவும் இருக்கும்.

இந்தப்பதிவில் நாம் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய டாப் 10 குளிர்ச்சியான சுற்றுலா இடங்களைப் பற்றி பார்க்கலாம். அது மட்டும் இல்லாமல் அந்த இடத்தை சுற்றிப்பார்க்க சிறந்த நேரத்தையும் பார்க்கலாம்.

இன்னும் சுவாரஸ்யமான தகவல்களை பெற எங்கள் டெலிகிராம் பக்கத்தில் இணையுங்கள் 👇👇👇

https://t.me/health_tips_tamil

10. ஆனைமலை ( Aanaimalai )

இந்த இடம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள ஒரு மலைத்தொடர். இது கடல் மட்டத்தில் இருந்து 1115 அடி முதல் 8244 அடி வரை அமைந்துள்ளது. இந்த ஆனைமலை சரணாலயத்தில் புலிகள், யானைகள், நரி, கரடி போன்ற பல வகையான விலங்குகளையும், பறவைகளையும் பார்க்கலாம். இங்கு ஜீப் சவாரி, யானை சவாரி செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. அதுமட்டும் இல்லாமல் இரவு தங்குவதற்கு Tree house, Resort உள்ளது. நமக்கு தேவைப்பட்டால் முன் பதிவு செய்து இரவு இருக்கலாம். காட்டு விலங்குகளை பார்க்க வேண்டும் என்று விரும்பினால் ஆனைமலை செல்லலாம்.

கோயம்புத்தூரில் இருந்து பொள்ளாச்சி வழியே 80 கி.மீ தொலைவில் டாப்சிலிப் ஆனைமலை வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது. இந்த இடத்திற்கு அருகில் பரம்பிக்குளம் டைகர் ரிசர்வ், வால்பாறை, மாசாணி அம்மன் கோவில், சோலையாறு அணை, குரங்கு அருவி போன்ற சுற்றுலா இடங்களையும் பார்த்து மகிழலாம். இந்த இடத்தை சுற்றிப்பார்க்க டிசம்பர் முதல் ஜீன் வரை இந்த மாதத்தில் சுற்றிப்பார்க்கலாம்.

9. வெள்ளியங்கிரி மலை ( Velliangiri Hills )

இந்த மலை கோயம்புத்தூர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியல் அமைந்துள்ளது. வெள்ளியங்கிரி மலை முழுவதும் பனி மேகமாக சூழ்ந்து வெள்ளியாக காணப்படுவதால் இந்த மலையை வெள்ளியங்கிரி மலை என்று கூறப்படுகிறது. இந்த மலை கடல் மட்டத்திலிருந்து 3500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த இடத்தில் குளிர்காலத்தில் 20 டிகிரி செல்சியஸ், கோடைக்காலத்தில் 28 டிகிரி செல்சியஸ் இருக்கும்.

இந்த வெள்ளியங்கிரி மலை உச்சியில் சிவன் கோவில் அமைந்துள்ளது. வெள்ளியங்கிரி மலையானது மொத்தம் ஏழு சிகரங்களை கொண்டுள்ளது. நாம் ஏழு சிகரங்களை கடந்து 5 முதல் 6 கி.மீ மலை ஏறி வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிக்கலாம். இந்த இடத்தை சுற்றிப்பார்க்க சிறந்த மாதம் அக்டோபர் முதல் ஏப்ரல் மாதம் வரை குளிர்காலத்தில் அருமையாக இருக்கும்.

8. ஏலகிரி மலை ( Yelagiri Hills )

திருப்பத்தூர் மாவட்டத்தோட கிழக்கு தொடர்ச்சி மலைகளை சேர்ந்த ஒரு மலைப்பகுதி. ஊட்டி, கொடைக்கானல் மாதிரி மிகவும் பெரிய சுற்றுலாத் தளமாக இல்லை என்றாலும் பாராசூட் பயிற்ச்சி எடுப்பவர்கள், டிரக்கிங் செல்பவர்கள் மத்தியில் சிறந்த இடமாக அமைந்துள்ளது. இந்த மலை கடல் மட்டத்தில் இருந்து 4 ஆயிரம் உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு குளிர்காலத்தில் 20 டிகிரி செல்சியஸ், கோடைக்காலத்தில் 27 டிகிரி செல்சியஸ் சராசரி வெப்பநிலையில் உள்ளது.

ஏலகிரியில் சுற்றிப்பார்க்க புங்கனூர், ஏரி போட்ட ஹவுஸ், ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி, பெருமாள் கோவில், இயற்கை பூங்கா, நிலவூர் ஏரி என்று நிறைய இடங்கள் உள்ளது. இந்த இடத்தை சுற்றிப்பார்க்க சிறந்த சீசன் நவம்பர் முதல் பிப்ரவரி சூப்பராக இருக்கும்.

7. மேகமலை ( Megamalai )

இந்த இடத்தில் பெரிய மரங்கள் நிறைந்த காடு, பசுமையான தேயிலைத் தோட்டங்கள், காபி பயிர் தோட்டங்கள், மிகவும் ஆழமான பள்ளத்தாக்கு, அழகிய ஏரிப்பகுதி என்று பல இயற்கை அழகு மேகமலை யில் உள்ளது. இந்த இடம் தேனி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது. மேகமலைக்கு சென்றால் மேகங்களை மிக அருகில் பார்க்க முடியும், அதனால் தான் இந்த இடத்திற்கு மேகமலை என்று கூறப்படுகிறது.

மேகமலையில் மகாராஜா மெட்டு, சுருளி அருவி, ஊத்துப்பாறை அருவி, மங்கள தேவி கன்னகி கோவில் என்று பல இடங்கள் உள்ளது. இங்கு குளிர்காலத்தில் 18 டிகிரி செல்சியஸ், கோடைக்காலத்தில் 26 டிகிரி செல்சியஸ் என்று சராசரி வெப்பநிலையில் இருக்கும். இந்த இடத்தை சுற்றிப்பார்க்க சிறந்த காலம் அக்டோடர் முதல் மே சிறந்த காலமாக இருக்கும்.

6. ஏற்காடு ( Yercud )

இந்த இடம் சேலம் மாவட்டத்தோட கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடரான சேர்வராயன் மலைத்தொடரில் அமைந்துள்ளது. ஏற்காடு ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுகிறது. இந்த மலை கடல் மட்டத்தில் இருந்து 5300 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

ஏற்காட்டில் சுற்றிப்பார்க்க ஏற்காடு லேக் போட்ட ஹவுஸ், கிளியூர் நீர்வீழ்ச்சி, பகோடா பாய்ன்ட், சேர்வராயன் கோவில், தாவரவியல் பூங்கா என்று சுற்றிப்பார்க்க நிறைய இடங்கள் இருக்கிறது. இங்கு குளிர்காலத்தில் 18 டிகிரி செல்சியஸ் கோடைக்காலத்தில் 25 டிகிரி செல்சியஸ் இருக்கிறது. இந்த இடத்தை சுற்றிப்பார்க்க சிறந்த சீசன் அக்டோபர் முதல் பிப்ரவரி இந்த மாதங்கள் சிறந்த மாதமாக உள்ளது.

5. கொல்லிமலை ( Kolli Hills )

நாமக்கல் மாவட்டம் தமிழ்நாட்டின் நடுப்பகுதியில் கொல்லிமலை அமைந்துள்ளது. இந்த மலை கடல் மட்டத்தில் இருந்து 4623 அடி உயரத்தில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டிலே ஆபத்தான அதிக கொண்டைஊசி வளைவுகளை கொண்ட மலையாக கொல்லிமலை அமைந்துள்ளது. பல மர்மங்கள் நிறைந்த இந்த கொல்லிமலை அடைய தொடர்ச்சியாக 70 கொண்டைஊசி வளைவுகளை கடக்க வேண்டும்.

இந்த கொல்லிமலையில் ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி, அறப்பளீஸ்வரர் திருக்கோவில், வாசலூர்பட்டி படகு இல்லம், முதுமக்கள் தாழி, எட்டுக்கை காளியம்மன் கோவில், சித்தர் குகைகள் என்று பல இடங்கள் உள்ளது. இந்த மலையில் குளிர்காலத்தில் 16 டிகிரி செல்சியஸ் கோடைக்காலத்தில் 27 டிகிரி செல்சியஸ் இருக்கும். இந்த இடத்தை சுற்றிப்பார்க்க சிறந்த சீசன் மார்ச் முதல் ஜீன் சிறந்த மாதமாக உள்ளது.

4. குன்னூர் ( Coonoor )

நீலகிரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள நீலகிரி மலையில் அமைந்துள்ளது. குன்னூர் கடல் மட்டத்தில் இருந்து 4927 அடி உயரத்தில் அமைந்துள்ளது. குன்னூரில் குளிர் காலத்தில் 13 டிகிரி செல்சியஸ் கோடைக்காலத்தில் 19 டிகிரி செல்சியஸ் இருக்கிறது.

இங்கு சுற்றிப்பார்க்க சிம்ஸ் பூங்கா, துரூக் கோட்டை, டால்பின் மூக்கு, லேம்ப் பாறை, கட்டாரி அருவி, மறைக்கப்பட்ட பள்ளத்தாக்கு என்று பல இடங்கள் உள்ளது. இந்த இடத்தை அக்டோபர் முதல் மார்ச் இந்த மாதத்தில் செல்லலாம். கூட்டம் இல்லாமல் சுற்றுலா செல்ல விரும்பினால் இந்த இடம் சிறந்த இடமாக உள்ளது.

3. கோத்தகிரி ( Kotagiri )

இந்த இடம் நீலகிரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரான நீலகிரி மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு தேயிலை தோட்டங்களும், தேயிலை தொழிற்சாலைகள் அதிகமாக உள்ளது. இந்த இடம் கடல் மட்டத்தில் இருந்து 6528 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

இந்த இடத்தில் ரங்கசாமி தூண் மற்றும் சிகரம் , கொடநாடு வியூ பாயின்ட் , கேத்தரின் நீர் வீழ்ச்சி , எல்க் அருவி, ஜான் சுல்லிவன் நினைவிடம், நீலகிரி அருங்காட்சியகம், நேரு பூங்கா, ஸ்நௌடன் சிகரம் போன்ற நிறைய இடங்கள் உள்ளது. இந்த இடத்தை சுற்றிப்பார்க்க டிசம்பர் முதல் மே மாதம் சிறந்த மாதமாகும்.

2. கொடைக்கானல் ( Kodaikkanal )

இந்த இடம் திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த மலையை தமிழ்நாட்டின் மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படுகிறது. 12 வருடத்திற்கு பூக்கள் கூடிய குறிஞ்சி பூக்கள் நிறைய இங்கு காணப்படுகிறது. கொடைக்கானல் கடல் மட்டத்தில் இருந்து 6998 அடி உயரத்தில் உள்ளது.

கோக்கர்ஸ் வாக், பியர் ஷோலா நீர்வீழ்ச்சி, பிரையண்ட் பூங்கா, கொடைக்கானல் ஏரி, தற்கொலை முனை, செண்பகனூர் அருங்காட்சியம், கொடைக்கானல் அறிவியல் வானாய்வகம், தூண் பாறைகள், குணா குகைகள், வெள்ளி நீர்வீழ்ச்சி, டால்பின் நோஸ் பாறை, குறிஞ்சி ஆண்டவர் கோயில், பேரிஜம் ஏரி போன்ற பல சுற்றுலாத் தலங்கள் கொடைக்கானலின் சுற்றுப்புறத்தில் அமைந்துள்ளன. இந்த இடத்தை சுற்றிப்பார்க்க ஏப்ரல் முதல் ஜூன் மாதம் சிறந்த மாதமாகும்.

1. ஊட்டி ( Ooty )

இந்த இடத்தை உதகை என்றும் ஊட்டி என்றும் சுருக்கமாக அழைக்கக்கூடிய உதகமண்டலம் நீலகிரி மாவட்டத்திலுள்ள நீலகிரி மலைத்தொடரில் அமைந்துள்ளது. ஊட்டி மலைகளின் அரசி என்று அழைக்கப்படுகிறது. இந்த மலை கடல் மட்டத்தில் இருந்து 7347 அடி உயரத்தில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டின் மிக உயரமான மலைப்பகுதியான தொட்டபெட்டா ஊட்டியில் அமைந்துள்ளது.

ஊட்டியில் சுற்றிப்பார்க்க தாவரவியல் பூங்கா, ஊட்டி ஏரி, ரோஜா தோட்டம், தொட்டபெட்டா, பைக்காரா ஏரி, பனிச்சரிவு ஏரி, வென்லாக் டவுன் என்று பல இடங்கள் உள்ளது.

இந்த பதிவில் நாம் தமிழ்நாட்டில சுற்றுலாத்தளங்களை பற்றி பார்த்தோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *